...so it shall be written

"Noli turbare circulos meos" ~ Legendary last words of Archimedes

Friday, February 04, 2005

இருபத்தி மூன்றாவது படி :


துறை சார்ந்த புனைக் கதைகள் தமிழில் மிகக் குறைவென்பது என் தனிப்பட்ட கருத்து. இங்கொன்று அங்கொன்றாக ஓரிரு படைப்புகள் இருக்கலாமே தவிர அதிகம் இல்லை(ஒருவேளை எனக்கு தெரியாமல் கூட இருக்கலாம்). துறை சார்ந்த புனைக் கதை என்பதில் ஒரு குறிப்பிட்ட துறையை கதையின் பின்புலமாக அமைத்து , கதைப் போக்கின் ஊடாக அத்துறை பற்றிய பல நுணுக்கங்களை தெரியப்படுத்துவதோடல்லாமல் , கதையின் அடிப்படை கருவும் (
plot!!!) அத்துறை சார்ந்தே இருத்தல் வேண்டும். திரு. சுஜாதாவின் கனேஷ் வசந்த் படைப்புகள் ஓரளவிர்க்கு இதை ஓட்டி அமைந்திருக்கும் வக்கீல்களும் அவர்கள் துறை சார்ந்த நிகழ்வுகளுமாக இருந்தாலும் இவை அனைத்தும் கதாபத்திரங்களை மையப்படுத்திய கதைகளே. அதே போல் சமீபத்தில் படித்த திரு. சித்ரனின் கதை ஓன்றில் விளப்பரத்துறை பற்றிய செய்திகள் காணப்பட்டாலும் அடிப்படையில் அது காதலைப் பற்றி பேசும் கதை.

நான் படித்த வரையில் ஆங்கிலத்தில் துறை சார்ந்த புனைக் கதைகள் அதிகம். பரவலாக அறியப்பட்ட ஜான் க்ரிஷம் (சட்டம் சார்ந்த), எனக்கு மிகவும் பிடித்த மைக்கேல் கிரைடன் ( ஒவ்வொரு கதையிலும் ஏதாவது ஒரு துறையை மையப்படுத்தி பிரித்து பேன் பார்த்து விடுவது இவருடைய வழக்கம்), ராபின் கூக் ( மருத்துவம் சார்ந்த ) , டாம் க்ளான்ஸி ( ராணுவம் சார்ந்த) போன்ற பல எழுத்தாளர்களின் படைப்புகளை சொல்லலாம். இவைகள் ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே , இவை போன்று பல படைப்புகள் உள்ளன. தமிழில் ஏன் இது போன்று வருவதில்லை என்ற கேள்வி வெகு நாட்களாகவே எனக்கு உண்டு. ஒருவேளை நாம் இருக்கும் துறையையும் , அதில் நம் பங்களிப்புகளையும் வெறும் வருமானம் ஈட்டுவதற்கான வழிகளாகவே பார்ப்பதால் அதில் சுவாரசியமாக கூறுவதற்கு ஒன்றும் இல்லை என்று நினைகிறோமோ என்று தோன்றுகிறது.

நிற்க , இருபத்தி மூன்றாவது படி பல வருடங்களுக்கு முன்னால் படித்த கதை. இப்பொழுதும் எங்கள் வீட்டுப் பரணில் எங்கோ ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இது அகழ்வாராய்ச்சியை மையமாகக் கொண்ட கதை. ஆசிரியர் யாரென்று நினைவில் இல்லை சுஜாதாவாக இருக்கலாம் , அவர் களப்பிரையர்களை பற்றி ஒரு கதை எழுதியிருக்கிறார் , அது இதுவா என்றும் நினைவில் இல்லை. ஒரு பொறுப்பற்ற இளைஞன் , வேறு வழியின்றி ஒரு அகழ்வாராய்ச்சி குழுவில் இனைந்து ஒரு ஆராய்ச்சி யாத்திரையில் பங்குகொள்கிறான் . அதில் வரும் பல்வேறு தடைகளை எதிர்கொள்வதன் மூலம் அவன் வாழ்வில் முதிர்ச்சி அடைவதாக கதை. அகழ்வாராய்ச்சி பற்றிய என் ஆர்வத்தினை முதல் முதலில் தூண்டிய கதை. ஒரு குறிப்பிட்ட துறை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டுவதே துறை சார்ந்த கதைகளின் பயன். தமிழில் இது போன்ற கதைகள் அதிகம் வர வேண்டும், அதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த அறிதல் திறன் ( General Awareness ஐ வேறு எப்படி தமிழ்படுத்துவது என்று தெரியவில்லை) பெருக வேண்டும்.