...so it shall be written

"Noli turbare circulos meos" ~ Legendary last words of Archimedes

Thursday, January 27, 2005

காய்ச்சலும் சில பவர் பாயிண்டுகளும்:

(ஆகா என்ன ஒரு அருமையான பின் நவீனத்துவ தலைப்பு!!!)

அமெரிக்க வட கிழக்கு பகுதிகளில் சென்ற வாரம் அடித்த பனிப் புயலின் மிக முக்கியமான பின் விளைவு எனக்கு காய்ச்சல் வந்ததே ஆகும்!!!. விழுந்த பனியை சுத்தப்படுத்த முடியாததால் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகள் அலுவலக விடுமுறை , பின் தூங்கி பின் எழுந்து சோம்பிக் கிடந்தது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் செவ்வாய் இரவு படுக்கப் போகும் பொழுதே ஏதோ சரியில்லை என்று புரிந்துவிட்டது. படுத்தவுடனேயே ஆழ்ந்து , இடையூரில்லா தூக்கமே என் வழக்கம். ஏனென்றால் தூக்கம் ஆளை அடிக்கும் வரை படுப்பது கிடையாது, இருக்கவே இருக்கிறது புத்தகங்கள் , சிறு வயது முதலாகவே இப்படித்தான் , இப்போழுது கூடுதலாக டிவிடீக்கள் வேறு. ஆகவே கனவு என்பது மருந்துக்கும் கிடையாது , அட வேறு எதுவும் இல்லாவிடினும் ஒரு சிம்ரனோ , ஜோதிகாவோ வரலாம் இல்லையா , ம்ஹூம் எதுவும் கிடையாது.

ஆனால் செவ்வாய் இரவு படுத்தவுடன் ஒரு அரை மயக்க நிலை, தொடர்பில்லாத பல்வேறு காட்சிகள் , முடிவில்லாத ஒரு பவர் பாயிண்டில் அதி வேகமாக நகர்வதைப் போன்ற ஒரு உணர்வு. வால்மார்ட்டில் பார்த்த என் நினைவில் தங்கியிருக்காது என்று நினைத்த பெண்னின் முகம் , நான் கிரிக்கெட் விளையாடுவதைப் போன்ற காட்சி போன்ற ஒரு சில காட்சிகள் தெளிவாகத் தெரிந்தாலும் , மனதை எதிலும் ஒருமுகப்படுத்த முடியாத நிலை. போதும் போதும் என்று நான் அலறுவது எனக்கே நன்றாகக் கேட்கிறது , ஆனால் எதுவும் செய்ய முடியாத நிலை. கஷ்டப்பட்டு எழுந்து உட்கார்ந்தால், - இங்கு ஜுலை நான்கிற்கு போடும் திறந்த வெளி கண்காட்சியில் ஸிப்பர் (zipper) என்று ஒன்று இருக்கும் , அடிப்படையில் நம் குடைராட்டினம் தான் ஆனால் ஒரு கூடுதல் கிக் கிற்காக , பூமி சூரியனை சுற்றுவதோடல்லாமல் தன்னை தானே சுற்றுவதைப் போல இதை அமைத்திருப்பார்கள் , அதாவது குடைராட்டினம் சுற்றும் போது நீங்கள் அமர்ந்திருக்கும் கூண்டும் தன்னிச்சையாக அதன் அச்சில் சுற்றும் அதில் அமர்ந்திருப்பதைப் போன்ற ஒரு உணர்வு , அறையில் உள்ள புத்தகங்கள் , காற்றாடி , அயர்ன் பாக்ஸ் அனைத்தும் அந்தரத்தில் சுற்றுகின்றன. காய்ச்சல் , சளி , தலைவலி எல்லாம் ஒரு சேர உடம்பில் சம்மனமிட்டு அமர்ந்திருப்பது புரிந்தது. ஒரு வழியாக தட்டுத் தடுமாறி எழுந்து , நைக்குவில்லை தேடிக் கண்டுபிடித்து ஒரு 15மில்லி உள்ளே தள்ளிய பிறகுதான் நிம்மதியாக தூங்க முடிந்தது. அடுத்த நாள் அலுவலகத்திற்கு 12.00 மணிக்கு சென்றதும் , பழியை நைக்குவில்லின் மேல் போட்டு கதையடித்துக் கொண்டிருந்ததும் தனிக் கதை.

1 Comments:

At 6:38 AM, Blogger தமிழ் குழந்தை said...

தமிழ் தகவல் தொழில் நுட்பம் வளர்ச்சியடைய பிளாக்கர் மூலமாக பல அரிய கருத்துக்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். உங்கள் கருத்துக்கள் தெளிவாகவும் அருமையாகவும் உள்ளது.

 

Post a Comment

<< Home