...so it shall be written

"Noli turbare circulos meos" ~ Legendary last words of Archimedes

Friday, December 31, 2004

யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி..:


இன்பமும் துன்பமும் கலந்ததுதான் வாழ்க்கையென்ற தத்துவப்பூர்வமான உண்மை பிடிபட்டாலும் , நம் நிலைக்கப்பாற்பட்ட பேரழிவுகள் தாக்கும் பொழுது , நேரடித் தொடர்பு இருந்தாலும் , இல்லாவிடினும் , உருத்தெரியாமல் நம்மில் இருந்த ஏதோவொன்று பரிக்கப்பட்டது போன்றதொரு உணர்வு. வார்த்தைகளால் விவரிக்க முடியாத , கண்ணீராலும் , அழுகைகளாலும் மட்டுமே உணர்ந்து , அதன் மூலம் மட்டுமே நம் எண்ணங்களை வெளிக்காட்ட முடியும் என்ற தருணங்களில், அறிவுசார் வாழ்வியல் தத்துவங்கள் எல்லாம் பயனற்ற குப்பைகளாகிவிடுகின்றன. இது போன்ற முற்றும் துறந்த தருணங்கள் நீடிப்பதில்லை என்ற போதும் , ஆறாத வடுக்களை நம்மில் விட்டுச் செல்கின்றன.

கும்பகோணம் தீ விபத்தும் , ஸுனாமிப் பேரழிவும் வாழ்வின் நிலையற்ற தன்மையை பறைசாற்றினாலும் , இப்பேரழிவுகளின்பாற்பட்ட மனித உணர்ச்சிகளின் வெளிப்பாடும் , இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ஒரு குழு மனப்பாண்மையுடன் மற்றவர்களால் மேற்கொள்ளப்பட்ட , மேற்கொள்ளப்படுகின்ற முயற்சிகளும் (மனிதர்களின் சார்பு நிலைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக வெளிப்பட்டபோதிலும்) சக மனிதர்களின் மேல் நம்பிக்கை தருவதாகவே உள்ளன.


நம்பிக்கையும் , எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளும் கவலைகளும் மட்டுமே இத்தகைய தருணங்களில் மனிதர்களை முன்னோக்கி நகர்த்தக்கூடியவை. நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இது முட்டாள்தனமாகப்பட்டாலும் , ஆறுதல் வார்த்தைகளும் , சக மனிதர்களின் உதவியும் , பரிவும், எதிர்காலத்தை குறித்த கவலைகளும் மட்டுமே அவர்களை இப்பேரழிவிலிருந்து மீட்டெடுக்க உதவும்.


கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் ப்ரார்த்தனை செய்யுங்கள் , கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நீங்கள் அன்பு கொண்டவர்களுடனும் , உங்கள் மேல் அன்பு கொண்டவர்களுடனும் சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கான உங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் தம்மால் முடிந்த அளவு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்துடனும் , வரும் வருடமாவது இது போன்ற அழிவுகளை தாங்கி வராமல், காயத்திற்கு மருந்தாக , பாதிக்கப்பட்ட அனைவரும் ஏதேனும் ஒரு வகையில் தம் வாழ்வை புணரமைத்துக் கொள்ள உதவும் வகையில் அமைய வேண்டும் என்ற பேராசையுடன் ........


யாவரும் இன்புற்றிருக்கவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே