...so it shall be written

"Noli turbare circulos meos" ~ Legendary last words of Archimedes

Friday, September 17, 2004

செங்கிஸ் : தொகுதி 2

தொகுதி 1 இங்கே

அடுத்ததாக செங்கிஸின் கொடூரத்தை காட்டுவதற்காக கொடுக்கப்பட்ட இரண்டு சம்பவங்கள் : ஒன்று தோற்கடிக்கப்பட்ட ஒருவனை காலால் உதைத்தே கொன்றார்கள் இது சுவாரசியம் கருதி எழுதப்பட்ட ஒரு கற்பனை . இங்கு பெயரில்லாமல் குறிப்பிடப்படுபவரின் பெயர் ஜமுகா (Jamukha) . ஒரு காலத்தில் செங்கிஸுடன் ரத்த சகோதர தீர்மானம் ஏற்று , நட்புரிமையுடன் இருந்த ஜமுகா பின் செங்கிஸின் வளர்ச்சி கண்டு பொறாமைப்பட்டு , பிரிந்து சென்று , செங்கிஸின் எதிரணியினரால் குர் கான்ஆக தேர்ந்தெடுக்கப்பட்டு , செங்கிஸை அழிக்க பலமுறை போர் தொடுத்தவன் . கடைசியில் செங்கிஸின் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட பொழுது ஜமுகாவை மன்னித்து மீண்டும் தன் ரத்த சகோதர னாக ஏற்றுக் கொள்ள செங்கிஸ் தயாராக இருந்த போதும் , அத்தகைய வாழ்வு தனக்கு வேண்டாம் என்றும் , தன் கடைசி கோரிக்கையாக ரத்தம் சிந்தாமல் இறக்க வேண்டும் ( ஆன்மா ரத்தத்தில் தான் இருக்கிறது என்பது மங்கோலியர்களின் நம்பிக்கை) என்றும் ஜமுகா கேட்டுக் கொண்டபடியே , நசுக்கிக் கொல்லப்பட்டான் .

மங்கோலியர்களை காட்டுமிராண்டிகளாக காட்டும் இரண்டாவது கருத்து தாகம் வந்தால் தன் குதிரையின் கழுத்தை சரக்கென அறுத்து ரத்தம் குடிப்பார்கள் . இது மிகவும் ஒருதலை பட்சமான கருத்து . செங்கிஸின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது , அதிவேகப் பாய்ச்சலுடன் வரும் குதிரைகள் மீது அமர்ந்தபடியே முன்னும் பின்னும் , இருபுறமும் அம்பு மழை பொழியும் மங்கோலியர்களின் குதிரைப்படையே. குதிரை மனிதர்களைப் (centaurs) போல ஓருடல் ஈருயிராக மங்கோலியக் குதிரைப் படை செயல்பட்டதாக போர்க் குறிப்புகள் கூறுகின்றன . அதுமட்டுமல்லாமல் , நடக்கப் பழகுவதற்கு முன்பே மங்கோலியக் குழந்தைகள் குதிரையேற்றம் பழகிவிடுவார்கள் என்றும் பெண்களும் குதிரையேற்றத்தில் தேர்ந்தவர்கள் என்றும் குறிப்புகள் உள்ளன. இப்படி வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் உபயோகப்படும் குதிரைகளை பேணுவதில் ம்ங்கோலியர்கள் காட்டிய கவனத்திற்கும் , அக்கட்டுரையில் குறிப்பிடும் நிகழ்வுக்கும் மிகுந்த முரண்பாடு உள்ளது. இதைப் பற்றி பீட்டர் ப்ரண்ட் குறிப்பிடும் பொழுது , பாலைவனத்தில் ( கோபி(gobi) பாலைவனம்) பஞ்சம் தலைவிரித்தாடும் காலங்களில் , உயிர் வாழ்வதற்காக ஆடு , மாடு, எலி என அனைத்தையும் மங்கோலியர்கள் உண்பார்கள் என்றும் , பாலைவனத்தில் தன்னந் தனியாக தொலைந்தலையும் நேரங்களில் உயிர் வாழும் பொருட்டு , தங்கள் குதிரையின் ரத்தத்தைகூட குடிப்பார்கள் என்றும் , அத்தகைய நேரங்களில் கூட குதிரையை அறுத்த இடத்தை உடனடியாக தைத்து , மருந்திட்டு குதிரைகளை பராமரிப்பார்கள் என்றும் குறிப்பிடுகிறார் .

ஈயத்தை காய்ச்சி ஊற்றி ஒருவனைக் கொன்றதாக கூறப்பட்டது மட்டுமே உண்மை. க்வாரிசிம் மன்னனிடம் செங்கிஸ் கான் அனுப்பிய தூதுக் குழுவைக் கொன்ற ஒரு மாகாண ஆளுநரைத்தான் அப்படிக் கொன்றார்கள் . இது மிகவும் கொடூரமான செயல்தான் என்றாலும் , அதே காலகட்டதிலும் , அதற்குப் பின்னும் நடந்த புனிதப் போர்களும் இதைவிட நூறு மடங்கு கொடூரங்கள் அரங்கேறியிருக்கின்றன.

கடைசியாக , செங்கிஸ் கானும் , அவனுடைய படைகளும் பல அழிவுகளுக்கு காரணமானவர்கள் தான் . போரில் பல கொடூரங்கள் புரிந்தவர்கள் தான். ஆனால் , அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தையும் , அவர்களுக்கு முன்னும் பின்னும் வாழ்ந்து மறைந்த சாம்ராஜ்யாதிபதிகள் கொண்டாடப்படுவதையும் கணக்கில் கொண்டால் , செங்கிஸ் அவர்களையெல்லாம் விட சிறந்த பேரரசனே . வெகுஜனப் பத்திரிக்கையில் பரபரப்புக் கருதியோ அல்லது இதையேல்லாம் யார் கவனிக்கப் போகிறார்கள் என்று கருதியோ திரு. மதன் எழுதியிருக்க மாட்டார் என்றே நம்புகிறேன் . இல்லாவிட்டால் , என்னைப் போன்ற யாராவது ஒரு ஜங்க்கி (Junkie) அதை வைத்து நாலு பக்கத்திற்கு ஒரு மடல் எழுதுவது நடந்து கொண்டுதான் இருக்கும் .

செங்கிஸ் : தொகுதி 1


இரண்டு வாரங்களுக்கு முன் , ஜுவியில் திரு. மதன் அவர்கள்
மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் பகுதியில் செங்கிஸ் கானைப் பற்றி எழுதியதை படித்தவுடனேயே அதைப் பற்றி எழுத வேண்டும் என நினைதேன். எந்தவொரு வரலாற்று நிகழ்வையோ அல்லது வரலாற்றுத் தொடர்புடைய மனிதர்களைப் பற்றியோ படிக்கும் பொழுதும் , அதைப் பற்றி எழுதும் பொழுதும், மூன்று அடிப்படை கோட்பாடுகளை புரிந்து கொண்டு அவற்றை ஒட்டியே நம் படைபுகள் இருத்தல் வேண்டும் :

· மறுக்க முடியாத, ஆதாரப்பூர்வமான உண்மைகள் (Irrefutable facts)

· அவ்வரலாற்று நிகழ்வின் தளமும் , காலமும் (Time Period)

· எந்தக் கோணத்திலிருந்து அந்நிகழ்வு விவரிக்கப்படுகிறது (point of view)

இந்த மூன்று துண்டுகளையும் சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டால் , எங்கள் சரித்திரப் பேராசிரியர் அடிக்கடி கூறுவதைப் போல you will miss the plot” .

செங்கிஸ் கானையும் , அவன் சார்ந்த மங்கோலியர்களையும் ஏதோ காட்டுமிராண்டிகள் போலவும் , கானை அலெக்ஸாண்டருடன் ஒப்பிட்டு , அலெக்ஸாண்டரே சிறந்தவன் (இதற்கு அவன் அரிஸ்டாடிலிடம் பாடம் படித்தவன் என்று காரணமும் கொடுக்கப்பட்டிருக்கிறது . அரிஸ்டாடிலின் சகோதரி மகனான கலிஸ்தெனிஸ்ஸைக் கொன்றதை இங்கு மறந்துவிடுவது நல்லது) என்பது போலவும் எழுதப்பட்டிருக்கும் அக்கட்டுரை மேற் குறிப்பிட்ட மூன்று துண்டுகளையும் கருத்தில் கொண்டு எழுதப்பட்டது அல்ல . அக்கட்டுரையில் கூறப்பட்ட மையக் கருத்து ( செ ஒரு மிருகம் ), முன்னொரு காலத்தில் ஐரோப்பிய வரலாற்று அறிஞர்களால் பரப்பப்பட்டது என்றாலும் அது வழக்கொழிந்து போன ஒன்று . எந்தவொரு சாம்ராஜ்மும் அழிவில்லாமல் , உயிர் சேதமில்லாமல் உருவானதாக சரித்திரம் கூறவில்லை. செங்கிஸ் உருவாக்கிய சாம்ராஜ்யமும் பிறருடைய அழிவிலும் , ரத்தத்திலுமே உருவாக்கப்பட்டது . ஆனால் இயற்கையாலும் , அண்டைப் பேரரசான சீனாவாலும் இடைவிடாது நசுக்கப்பட்ட , தங்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லாத ஒரு நாடோடிக் கும்பலைக் கொண்டு தன் சாம்ராஜ்யத்தை நிறுவியதுதான் செங்கிஸின் தனிச் சிறப்பு . செங்கிஸ் கானின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது . ஒரு தமிழ் சினிமாவிற்குத் தேவையான அனைத்தும் அதில் உண்டு ( காதல் , நண்பன் செண்டிமெண்ட் , பழிக்குப் பழி , அம்மா செண்டிமெண்ட் உட்பட ) . கானைப் பற்றி பீட்டர் ப்ரண்ட் எழுதிய புத்தகத்தின் தொடக்கத்தை நாம் அனைத்து சாண்டில்யன் நாவல்களிலும் பார்க்கலாம் நாயகன் எதிராளிகளிடம் தப்பிக்கவே முடியாததொரு சூழ்நிலையில் அகப்பட்டுக் கொண்டிருப்பான் . ஆனால் எதிர்பாரா திருப்பங்களாலும் தன் சமயோசனையினாலும் தப்பிப் பிழைப்பான் . கானின் வாழ்க்கை வரலாறு பிரிதொரு சமயம் , ஆனால் அக்கட்டுரையில் கூறப்பட்ட சில கருத்துக்களையும் , அக்கருத்துக்களின் மறுபக்கங்களையும் பார்க்கலாம் :

செங்கிஸ் கானைவிட அலெக்ஸாண்டர் சிறந்தவன்:

இருவருமே சாம்ராஜ்யவாதிகள் என்பதால் முதலில் அதனடிப்படையிலேயே இருவரையும் பார்ப்போம் . செங்கிஸ் கானுடன் ஒப்பிட்டால் அலெக்ஸாண்டர் ஒரு மிகச் சாதாரணமான படைத் தலைவனாகிப் போகிறான் . அலெக்ஸாண்டர் ஒரு குறுகிய மனம் படைத்த முன்கோபி என்பது வரலாற்று அறிஞர்களால் ஒத்துக் கொள்ளப்படும் கருத்து. மிகச் சிறந்த போர் வீரனென்றாலும் , அவனுடைய வெற்றிக்கு முக்கிய காரணம் அவன் தந்தை பிலிப்பால் உருவாக்கப்பட்ட , நியமிக்கப்பட்ட தளபதிகளேயாகும் . ஆனால் எந்த விதமான முறையான போர் தந்திரங்களும் , கூட்டுப் பயிற்ச்சியும் இல்லாத மங்கோலியர்களை உலகமே நடுங்கும் ஒரு படையாக குறுகிய காலகட்டத்தில் உருவாக்கியவன் செங்கிஸ் .

போரஸை தோற்கடித்தபின் மறுபடியும் அவனை அரசனாக்கியது சிலாகித்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அது ஒரு போர் தந்திரமே தவிர, வேறொன்றும் இல்லை. இந்தியாவின் மையப் பகுதிவரை வரத் திட்டமிட்டிருந்த அலெக்ஸாண்டரை எல்லையிலிருந்த ஒரு சிறிய நாட்டின் அரசனான போரஸின் போர்க் குணமும் , வல்லமையும் திடுக்கிடவே வைத்திருக்க வேண்டும் . போரஸின் பகுதியைவிட மிகப் பெரியதும் , பலமடங்கு சிறந்த படைபலம் பொருந்திய மகதத்தை எதிர் கொள்வதற்கு முன் தன் முதுகுப் பகுதியை தற்காத்துக் கொள்ளும் முயற்சியே போரஸுடனான சமாதானம் . அதுமட்டுமல்லாமல் , எதிரிகளான போரஸையும் , அம்பியையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதன் மூலம் , அவர்களை ஒன்று சேரவிடாமல் எதிரிகளாகவே பிரித்து வைக்கவும் உதவும்.

அதே சமயம் , தான் போற்றும் குணம் இருந்துவிட்டால் , அது எதிரியாக இருந்தாலும் , மன்னித்து சிறப்பிக்கும் குணம் செங்கிஸிடம் இருந்தது. வெகு தூரத்திலிருந்து தன்னை அம்மெய்து கொல்ல முயன்றவனின் வீரத்தை மதித்து , அவனுக்கு ஜெப்பை (Jebei , arrow in mongolian) என்று பெயர் சூட்டி தன் மெய்க்காவல் படையின் தலைவனாக்கியது , தன் ஜென்ம விரோதிகளான டார்டார் ( Tartar) இனத்தை சேர்ந்த ஒருவனை நீதி நிர்வாகத்தில் தனக்கு அடுத்தபடியான பதவியில் நியமித்தது, சீனாவைச் சேர்ந்த ஒருவனை தன் முக்கிய ஆலோசகராக நியமித்தது , இப்படி பல உதாரணங்கள் உண்டு.

~வளரும்